வேங்கையின் மைந்தன்-அகிலன்
வேங்கையின் மைந்தன், அகிலன் என்பது எழுதிய புகழ்பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினமாகும். 1960 இல் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.
முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிகாலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருதை இந்நூல் பெற்றுள்ளது.
கதையின் வரலாற்றுப் பின்னணி;-
.
விஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களில் புகழ்பெற்றவர்களான இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆகிய மூவரும் சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்தப் பெரிதும் உதவின.
முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாகக் கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாடும் இராஷ்டிரகூடர்கள் ஆதிக்கத்துக்குள்ளானது இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி அளவிலேயே நின்றது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகான சோழ மன்னர்கள் கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் முதலாம் இராஜராஜ சோழர், முதலாம் இராஜேந்திர சோழர் மற்றும் அவரைத் தொடர்ந்தவர்கள் ஆவர்.
முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1012), அவரது மகன் இராஜேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுப் பின் இரண்டு ஆண்டுகளில் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். அவன் தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக் கொண்டான். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான். ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் இணைந்து சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.
முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் நோக்கோடும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் மீண்டும் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி[1] சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டு வந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.
இந்தக் காலகட்டத்தைத்தான் அகிலன் தன்னுடைய வேங்கையின் மைந்தன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். சங்க காலம் முதல் பிற்கால வரலாற்றிலும் அழியா இடத்தைப் பெற்றது கொடும்பை மாநகரம். சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்குச் செல்லும் சாலையில் இரு நாடுகளுக்கும் எல்லை வகுத்து விட்டு இடையில் வளர்ந்த சிற்றசர் நகரம் அது. காலங்காலமாக அதை ஆண்டுவந்த வேளிர்கள் தம் வீரத்துக்குப் பேர் போனவர்கள். பிற்காலச் சோழர்களுடன் நெருக்கமான மண உறவு கொண்டிருந்த குலம் அது. முதலாம் இராஜராஜனின் மனைவியும் இராஜேந்திர சோழனின் தாயுமான வானவன்மாதேவி கொடும்பாளூர்க் குலப்பெண். இக்கதையின் நாயகன் இளங்கோ கொடும்பாளூர் குலத்தோன்றல். இராஜேந்திரன் பாண்டிய நாட்டு முடியை ஈழத்திலிருந்து மீட்டு வந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னுமாக இப்புதினத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.
CLICK HERE PDF ;-வேங்கையின் மைந்தன்-அகிலன்
0 Comments