Header Ads Widget

விகடன் சுஜாதா மலர்




                                                  விகடன் சுஜாதா மலர்




சில வெற்றியாளர்கள் தக்கவைத்திருக்கும் இடங்களை இன்றைய தலைமுறையினர் சுலபத்தில் நிரப்பிவிடுகிறார்கள். காலத்தின் வேகமும், திறமைக்குப் பஞ்சமே இல்லாத உழைப்பும் நேர்த்தியும் சாதனையாளர்களைச் சர்வசாதாரணமாக உருவாக்கிவிடுகிறது. 


ஆனால், குறிப்பிடத்தக்க சிலருடைய மறைவு காலத்துக்கும் மாறாத, எவராலும் நிரப்பமுடியாத வெற்றிடங்களை உருவாக்கிவிடுகிறது. தமிழை அறிவியல் பாதையில் பயணிக்க வைத்த அசகாய சூரர் சுஜாதா அத்தகைய தனித்தன்மைக்காரர். சுவாரஸ்ய நடையில், ஜெட் வேக விறுவிறுப்பில், சட்டெனச் சிலிர்க்க வைக்கும் புதுமையில், வியக்க வைக்கும் நவீனத்தில் படைப்புகளைக் கொடுத்துத் தமிழுக்குத் தனி மரியாதை ஏற்படுத்தியவர் சுஜாதா.

 விகடன் வாசகர்கள் அத்தனை பேராலும் அறியப்பட்ட அறிவுப் பேராயுதம். வாசிப்பு உலகமே வணங்கிக் கடன்பட வேண்டிய அளவுக்கு எல்லாவிதத் தளங்களிலும் எழுதிக் குவித்த எழுத்துலக எந்திரன். ‘கி.பி.2000&க்கும் அப்பால்’, ‘ஏன், எதற்கு, எப்படி?’, ‘கற்றதும் பெற்றதும்’, ‘கண்ணீர் இல்லாத யாப்பு’, ‘யவனிகா’, ‘எப்போதும் பெண்’, ‘பதவிக்காக’, ‘பேசும் பொம்மைகள்’, ‘இரயில் புன்னகை’, ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு’, ‘ஆயிரத்தில் இருவர்’, ‘கொலை அரங்கம்’, ‘நிர்வாண நகரம்’, ‘நைலான் கயிறு’, ‘கொலையுதிர் காலம்’ என வியக்கவைத்த சுஜாதாவின் படைப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.







 1953ம் ஆண்டு ‘சிவாஜி’ என்ற பத்திரிகையில் சிறுகதை எழுதி தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய சுஜாதா பத்திரிகைகள், இணையம், சினிமா என எங்கெங்கோ விரிந்து பறந்தபோது பேனா பிடித்தவர்கள் அனைவருக்குமான வெற்றியாகவே அது பார்க்கப்பட்டது. சுஜாதா மறைந்தாலும், அறிவும் செறிவும் அழகியலும் கொண்ட அவருடைய படைப்புகள் சாகா வரம் பெற்றவை. விகடன் வாசகர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை... சுஜாதாவின் படைப்பை மறு பிரசுரம் செய்தாலும் தீபாவளிக் கொண்டாட்டம்தான் அவர்களுக்கு. காலத்துக்கும் கொண்டாடத்தக்க சுஜாதாவின் படைப்புகளில் விகடனில் வெளியான பன்முகத் தளத்திலானவற்றைத் தொகுத்து இந்த மலரை உருவாக்கி இருக்கிறோம். சுஜாதாவுக்கு மிக நெருக்கமானவர்களின் நினைவலைகள், சுஜாதாவின் விதவிதமான புகைப்படங்கள் ஆகியவற்றோடு இந்தப் படைப்புகளைப் படிக்கையில் ‘சுஜாதா உலக’த்தில் நிச்சயம் நீங்கள் ரீ என்ட்ரியாகலாம்.நிறைவு செய்ய முடியாத அசாத்திய படைப்புகளைத் தமிழுக்கு வார்த்துத் தந்த சுஜாதாவுக்கு சிறப்பு மலர் வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமகிழ்வு கொள்கிறது. காலப் பெருவெளியின் கௌரவ அடையாளமாக நெஞ்சம் சிலிர்க்கவைத்த படைப்பாளரின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதுதானே அவருக்கு நாம் காட்டும் நன்றிக்கடனாக இருக்க முடியும்.








Post a Comment

0 Comments