அரண்மனை ரகசியம்-பா.விஜய்
கிட்டத்தட்ட 1590-ஆம் ஆண்டு காலகட்டத்து தமிழக வரலாற்றை முழுக்க முழுக்க நிஜமான சம்பவங்களோடு சரித்திரப் பின்னணியோடு சொல்ல வருகிறேன்.
"அரண்மனை ரகசியம்'' என்ற பெயரில் ஆரம்பமாகும் இந்த வரலாற்றுத் தொடர் நிச்சயம் பல உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டும்.
செய்யப்படுவதல்ல சரித்திரத் தொடர்கதை; சொல்லப் படுவதே சரித்திரத் தொடர்கதை.
நம்முடைய தமிழ்மன்னன் ராஜராஜ சோழனும், பர்மா வரை புகழ்க்கொடி ஏற்றிய ராஜேந்திர சோழனும் வாழ்ந்து விட்டுப் போனபின் அந்த வீரத்தமிழினப் பரம்பரை முடிவுக்கு வந்தபின், நம் தமிழகத்தின் நிலை என்ன? அதன்பிறகு 17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் வந்து நுழையும் வரைக்கும் தமிழகத்தின் முக்கிய அரசியல் நிலவரம் எப்படி இருந்தது? யார் வசம் கிடைத்தது? எப்படித் திரிந்தது? என்ன ஆயிற்று? எங்கே எழுந்தது? விழுந்தது? என்பன போன்ற பல கேள்விகள் மனதைக்குடைய இந்த உண்மையிலும் உண்மையான காலகட்டம் என் கண்களுக்குப் புலனானது.
12-ஆம் நூற்றாண்டு வரை சோழவம்சம் பெரும் செல்வாக்கோடு பவனி வந்தது என்றாலும் அதன்பின் உள்உறவுகளில் துரோகங்கள், காட்டிக் கொடுத்தல், அரசியல் சூழ்ச்சி காரணமாய் மெல்ல மெல்ல தமிழின மன்னர்கள் புகழ் ஒடுங்கி, பராக்கிரமம் அற்றவர்களாய் சிதறிப் போகிறார்கள். ஒரு படையெடுப்பில் ஜெயிக்கும் மன்னன் எதிரி மன்னனது குடும்பத்தை கூண்டோடு அழித்தலும், அவனது கோட்டை கொத்தளம்-வாழ்க்கை-வாரிசு ஆகிய சுவடுகள் மிச்சமின்றி தீக்கிரையாக்கலும்தான் இந்த வம்சா வழி மன்னர் வாழ்வுக்கான முடிவுரையாகி இருக்கிறது.
சிதறிய மன்னர்களின் குறுநில ஆட்சி பலவீனத்தைப் பயன்படுத்தி, அக்கால கட்டத்தில் தமிழகத்தில் எல்லையில்லாக் கொள்ளைகளை வடநாட்டு மன்னர்களும், பிற மொகலாய புருஷர்களும் நிகழ்த்த, தென்னாடு மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. அந்த சமயத்தில்தான் விஜயநகர சாம்ராஜ்யத்தின் விஸ்வரூப எழுச்சி நிகழ்கிறது. விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி கிருஷ்ணதேவராயரின் பெரும் வருகைக்குப் பிறகு தமிழக சரித்திரம் மாறுகிறது. புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்படுகிறது. இவற்றை விரிவாகவும் இத்தொடரில் சொல்ல இருக்கிறேன். அப்போது தென்னாட்டில் நடந்த அரசியல் சதுரங்கம் "இன்றை'' விட சுவாரஸ்யமாகவும், பயமுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
இவ்வளவு காலம் எப்படி இந்தக் கதைக்களம் சரித்திர ஆசிரியர்கள் பார்வையில் விடுபட்டது என்று தெரியவில்லை. அதை நல்ல வாய்ப்பாக இங்கே பயன்படுத்திக் கொள்கிறேன். இதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்களின் உருவங்களை பல சிற்ப ஆய்வுகள் மற்றும் அழிந்த ஓவியங்கள் வாயிலாக கண்டறிந்து அந்த உருவங்களை உங்கள் கண்முன் சமர்ப்பிக்கிறோம். தொடரை வாசிக்கையில் அந்த உண்மை மனிதர்களே உள்ளத்துக்குள் வந்து போவார்கள் என்ற வாசிப்பு ருசிக்காக...!
இந்தத் தொடர் எழுத முக்கிய காரணம் பல சரித்திர கல்வெட்டுகளை, பல வரலாற்றுச் சுவடிகளை தன் நுண்ணறிவால் கற்றறிந்த தஞ்சை சரஸ்வதி நூலகத்தின் அறிவுப் பொக்கிஷமான திரு. குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள்தான். அவர்மூலம் கிட்டிய பல அரிய தகவல்களை அடித்தளமாகக் கொண்டு பல உண்மைச் சம்பவங்களை இணைத்துதான் இந்த தொடர் எழுதும் உத்வேகம் பிறந்தது. தஞ்சையில் ஆய்வுகள் செய்ய, குறிப்புகள் எடுக்க, பல உதவிகள் செய்தவர் தஞ்சை செழியன்.
போர்-அரசியல்-முத்தம்-கட்டில்-அரசவை-கவிதை-ராஜதந்திரம்-அழகிகள்-கொலை-மதிநுட்பம்-ரத்தம்-ஆன்மீகம்-தமிழகம்-கத்தி-பக்தி-கற்பனை-மோதல்-வஞ்சம்-பழி-காதல்-சிற்றின்பம்-உக்கிரம் என இவ்வளவு கலவையுடன் இந்தத் தொடரை உங்கள் வாசிப்பு வளர்க்கும் என்ற நம்பிக்கையில் துவங்குகிறேன்.
-பா.விஜய்
CLICK HERE PDF ;-அரண்மனை ரகசியம்-பா.விஜய்
0 تعليقات