வன்னியர் இட ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் 29-ஆம்
தேதி மக்கள்திரள் போராட்டம்!
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட தொடர் போராட்டங்களில் இதுவரை 5 கட்ட போராட்டங்கள் 8 நாட்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் தொடங்கி சிறு கிராமங்கள் வரை நடத்தப்பட்ட போராட்டங்களின் வாயிலாக வன்னியர்களின் எழுச்சி அரசுக்கு துல்லியமாக தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இட ஒதுக்கீடு இன்னும் அறிவிக்கப்படாதது பெரும் அநீதியாகும்.
தமிழ்நாட்டின் தனிப்பெரும் சமுதாயம் வன்னியர்கள் தான். சமூக, கல்வி, பொருளாதார நிலையில் அவர்கள் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ளனர். அந்த வகையில் அவர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் ஏற்றுக்கொள்ளும். பல்வேறு சமுதாயங்கள் இந்தக் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு வெளிப்படையாகவே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன் 4 நாட்களுக்கு முதல்கட்டமாகப் பெருந்திரள் போராட்டம், அதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் முன் நான்கு கட்டங்களாக மக்கள்திரள் போராட்டங்களை பா.ம.க.வும், வன்னியர் சங்கமும் இணைந்து வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றன.
தமிழகத்தை ஆளும் அரசுக்கு சமூகநீதியில் அக்கறையும், மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கடமை உணர்வும் இருந்திருந்தால் இந்நேரம் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கும். யாருடைய உரிமையையும், பங்கையும் பறிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வன்னியர்களுக்கு இருந்ததில்லை. வன்னியர்கள் போராடிப் பெற்ற, உயிர்த் தியாகம் செய்து பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையை கடந்த 32 ஆண்டுகளாக அனுபவித்து வரும் பிற சமூகங்களுக்கும் ஒரு பகுதி இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் 20% தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை உள் ஒதுக்கீடு என்ற அளவில் தளர்த்திக் கொண்டிருக்கிறோம். இவ்வளவுக்குப் பிறகும் வன்னியர்களின் உள்ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தயங்குவதற்கு எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லை.
வன்னிய மக்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையில் உள்ள நியாயங்களை தமிழக அரசு நன்றாக உணர்ந்திருக்கிறது. வன்னியர்களின் கோரிக்கை நியாயமற்றது; அதை ஏற்க முடியாது என்று தமிழக அரசால் கூற முடியாது. ஆனாலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை. இது வன்னிய சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியாகும். வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வென்றெடுக்காமல் பா.ம.க.வும் ஓயப்போவதில்லை.
வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தும் தொடர் போராட்டங்களின் அடுத்தக்கட்டமாக வரும் 29&ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி & வன்னியர் சங்கம் சார்பில் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டக் குழு உறுப்பினர்கள், பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் நிர்வாகிகள், பல்வேறு அணிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், பாட்டாளி சொந்தங்கள், பிற கட்சிகளைச் சேர்ந்த வன்னிய சொந்தங்கள், சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இந்த மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் களப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. கடந்த திசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி இப்போது வரை 5 கட்டங்களாக அதிகாரிகள் வழியாக அரசுக்கு கோரிக்கை மனுக்களைக் கொடுக்கும் நிகழ்வுகளைத் தான் நடத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்து 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆறாம் கட்டப் போராட்டத்திற்கு முன்பாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், 29-ஆம் தேதி போராட்டத்திற்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் உயர்நிலை அமைப்புகள் கூடி அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கும் என்பதை தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
0 تعليقات